அன்பானவன் அடங்காதவன் அசராதவன்... ரொம்ப கொடூரமானவன்!
26 Monday Jun 2017

ஒரு படத்தை எப்படியெல்லாம் எடுக்கக் கூடாது என்பதை இரண்டரை மணி நேரம் உட்காரவைத்து வகுப்பெடுத்திருக்கிறார்கள் சிம்புவும் ஆதிக் ரவிச்சந்திரனும். இரட்டை அர்த்த வசனம், ஆபாச, அறுவறுப்பான காட்சிகள், எரிச்சலூட்டும் செய்கைகள் என வேண்டாத அத்தனையையும் விலை கொடுத்து அன்பானவன் அடங்காதவன் அசராதவன் என்ற இந்தப் படத்தில் வைத்திருக்கிறார் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்.

 

சிம்புவும், இயக்குநரும் தெரிந்தேதான் இந்த மாதிரி காட்சிகளை வைத்திருக்கிறார்களா? எடுத்த படத்தை ஒரு முறை கூட இருவரும் முழுசாகப் பார்க்கவில்லையா? என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன இந்த அஅஅ என்ற கொடுமையை அனுபவித்த பிறகு. கதை? அப்படி ஏதாவது இருந்தால்தானே சொல்ல!

 

சிம்பு ஒருதலையாக ஸ்ரேயாவைக் காதலிக்கிறார். பின்னர் ஸ்ரேயாவும் காதலிக்கிறார். இருவரும் ஓடிப் போய் கல்யாணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுக்கும் நேரத்தில் சிம்பு போலீசில் சிக்கிக் கொள்கிறார். பின்னர் வயதான பிறகு தமன்னாவைக் காதலிக்கிறார்... இப்படி தாறுமாறாக காதலிக்கிறார்... தோல்வி காணுகிறார். உடனே அட்வைஸ் பண்ண ஆரம்பித்துவிடுகிறார். முடியல... இதுல இரண்டாம் பாகம் வேறயாம்!

மூன்று வேடங்கள் சிம்புவுக்கு. ஒன்றிலாவது பார்க்கிற மாதிரி இருக்கணுமே. நாயகிகள் ஸ்ரேயா, தமன்னாவை சரக்குக்கு ஊறுகாய் ரேஞ்சுக்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள். பெண்களை இதைவிட கேவலமாக சித்தரிக்க முடியாது. அவ்வளவு மோசம். காதலியை வெளிப்படையாகவே 'மேட்டருக்கு' வா என்கிறார்கள். கொட்டாவி மூலம் காதலிக்கும் டெக்னிக்கை ரூம் போட்டு யோசித்திருப்பார்கள் போலிருக்கிறது. ஒய் ஜி மகேந்திரன் போன்ற காலாவதியான பார்ட்டிகளை விட்டு காமெடி பண்ண வைத்திருக்கிறார்கள். காதும் மூஞ்சும் எரிகிறது. கோவை சரளா, மொட்டை ராஜேந்திரன் கடுப்பேற்றுகிறார்கள். 

 

சிம்புவின் கேரியரில் இனி முயன்றாலும் இப்படி ஒரு மோசமான சினிமாவைத் தர முடியாது. யுவன் ஒருவர்தான் மெனக்கெட்டு இசை அமைத்து இருக்கிறார். மற்றபடி இந்தப் படத்தைப் பற்றி மேற்கொண்டு எழுத நினைத்தால், திட்டிக் கொண்டேதான் இருப்போம்.

 

அவ்வளவு 'சிறப்ப்பான' படம் இது!

 

    Related News...