விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம்!
28 Friday Jul 2017

அது ஒரு மழைநாள். சென்னைக்கும் கோவைக்கும் இடையில் அப்போதுதான் சாயிருக்கைகள் கொண்ட தனியார்ப் பேருந்துகள் இயங்கத் தொடங்கியிருந்தன. தொண்ணூறுகளின் தொடக்கம் என்று நினைவு. சென்னையிலோ கோவையிலோ அத்தகைய பேருந்துகள் ஒன்பது மணிக்கு மேல் கிளம்பும்.

பேருந்தில் ஏறியமர்ந்ததும் ஒரு முழுப் படத்தைப் போடுவார்கள். அது முடிவதற்கு நள்ளிரவு பன்னிரண்டுக்கு மேலாகிவிடும். அப்படம் முடிகையில் பயணிகளில் பெரும்பாலோர் உறங்கத் தொடங்கியிருப்பர். பிறகு பேருந்தின் மென்னுறுமல் மட்டுமே கேட்டுக்கொண்டிருக்கும். இப்போதுள்ளதுபோல் அப்போது கைப்பேசி நோண்டல்களுக்கு வாய்ப்பில்லை என்பதால் அந்தப் படத்தை எல்லாருமே பார்த்தபடி செல்வோம். என்ன படம் போட்டாலும் விரும்பிப் பார்ப்போம். புதுப்படம் பழைய படம் என்ற வேறுபாடு பார்ப்பதில்லை.

அந்த மழைநாளில் நான் சென்னையில் அப்படிப்பட்ட ஒரு சொகுசுப் பேருந்தில் ஏறியமர்ந்தேன். எனக்குக் காலதர் (சன்னல்) ஓரத்தில் வாகான முன்னிருக்கை தரப்பட்டது. எனக்கு முன்னே தொலைக்காட்சிப் பெட்டி. வெளியே அடங்காமல் அதிராமல் தொடர்ச்சியான மழைத்தூறல். மழைச்சாலை என்பதால் பேருந்தினை விரைந்து செலுத்தவும் முடியாது. மெல்லிய நகர்த்தலோடு அது சென்றுகொண்டிருக்க ஒரு படத்தைப் போட்டார்கள். என் வாழ்க்கையில் அப்படியொரு 'திரைப்பட மனநெகிழ்ச்சியை' நான் அடைந்ததேயில்லை. அந்தப் படம் 'கிளிஞ்சல்கள்'.

தமிழில் எடுக்கப்பட்ட மிக நல்ல காதல் படங்களில் கிளிஞ்சல்களுக்குக் கட்டாயம் இடமுண்டு. அதன் மூலக்கதை ஒரு மலையாளப் படமாக இருக்கக் கூடும் என்பதற்கான தடயங்கள் அப்படத்தில் இருந்தன. ஆனாலும் தமிழில் அது மிகக் கச்சிதமான வடிவத்தில் எடுக்கப்பட்டிருந்தது. காலத்தை வென்று நிற்கும் காதல் படம் அமையவேண்டுமானால் அதன் நாயகனும் நாயகியும் அன்றலர்ந்த பூப்போன்றதாக, புதுத்தளிராக இருக்க வேண்டும். மோகனும் பூர்ணிமாவும் அப்படத்தில் புத்தெழிலோடு இருந்தனர்.

இயக்குநர் துரையை அவருடைய 'பசி' என்னும் திரைப்படத்திற்காக நினைவு கூர்வார்கள். பசி மிக அருமையான படம்தான். அதில் மாற்றுக் கருத்தில்லை. பிறழ்ச்சியான காதலுறவால் தாயுற்ற கர்ப்பத்தைத் தானுற்றதாய்ப் பழியேற்கும் ஒரு பெண்ணின் கதைதான் பசி. அது வேறொரு வகைமைத் திரைப்படம். ஆனால், கிளிஞ்சல்கள் திரைப்படத்தால் நாமடையும் உணர்ச்சித் தளம் சிறப்பானது.

இன்றைக்கு அந்தப் படத்தைப் பார்த்தால் இவ்வளவு புகழ்ச்சிக்குத் தகுதியுள்ளதுதானா என்று நினைக்கத் தோன்றலாம். ஆனால், அத்திரைப்படம் வந்த காலகட்டத்தோடு அது ஏற்படுத்திய விளைவை நினைத்துப் பார்க்க வேண்டும். ஓர் அச்சுக்கூடம் நடத்தி வருபவரின் மகனுக்கும் அவ்வூரின் ஆசிரியர் மகளுக்கும் இடையே தோன்றும் காதல்தான் கிளிஞ்சல்களின் கதை. இருவரும் இளமையின் முதற்படிகளில் நிற்கும்போது ஏற்படும் இதயத்துடிப்பைக் காதலாக்கி மடைமாற்றம் செய்து வானத்தில் பறப்பார்கள். இருவர்க்குமிடையே மதம் குறுக்கே நிற்கும். வழக்கமான செவ்வியல் காதல் கதைகளில் நிகழும் பிரித்துவைப்பு நிகழ்ச்சிகள் இங்கும் நடக்கும். இறுதியில் இருவரும் மயானத்தில் பிணமாக ஒன்று சேர்வார்கள். செத்த உடல்களாய் அவர்கள் தழுவிக்கிடப்பார்கள். "அவர்களை வாழவிட்டிருக்கலாமே..." என்ற தவிப்பைப் பார்வையாளர்கள் அடைவார்கள்.

 

நான் அந்த மழையிரவில் மெல்ல நகரும் பேருந்தில் அந்தப் படத்தைக் கண்டுவிட்டு உறக்கமிழந்தேன். காதலின் பல்வேறு நுண்ணடுக்குகள் எனக்கு விளங்கினாற்போல் இருந்தது. காதலுக்கு என்றும் நடுத்தூணாய் நிற்பது பெண்ணின் உள்ளம்தான் என்பதை அன்று தெரிந்துகொண்டேன். தன் பெண்ணின் காதல் மனத்தைப் பிழையிழைக்காமல் பிசகுபடாமல் பேணுவதொன்றே காதலில் விழும் ஒவ்வோர் ஆணும் செய்ய வேண்டிய கடமை என்றுணர்ந்தேன். இங்கே வாழ்கின்ற காதல்கள் அனைத்துக்கும் பெண்ணின் வழாஅநிலையே காரணம். கிளிஞ்சல்கள் அப்படிப்பட்ட ஒரு காதல் படம்.

 

கதையைச் சிக்கல் சிடுக்குகளின்றிக் கூறிச்சென்றாலே அது தெளிவான திரைப்படமாக இருக்கும். கிளிஞ்சல்கள் படத்தில் அந்தத் தெளிவைக் காணலாம். கிளிஞ்சல்கள் என்றதும் 'ஜூலி... ஐ லவ் யூ' என்னும் ஜாலி ஆப்ரஹாமின் குரல் நினைவுக்கு வரவேண்டும். 'விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம் பார்வை நாடகம் அரங்கில் ஏறுதாம்..,' என்னும் அந்தப் பாடலைக் கேளாத செவிகள் இருக்கின்றனவா என்ன? அந்தப் படத்திற்குப் பாடல்களை எழுதி இசையமைத்தவர் டி. ராஜேந்தர் என்பது இன்னொரு செய்தி. டி. ராஜேந்தர் எழுதிய பாடல்களில் இந்தப் பாட்டுக்குத்தான் உறுத்தலில்லாத மயக்கச் சொற்கள் கூடி வந்திருக்கின்றன. 'மைதடவும் விழியோரம் மோகனமாய் தினமாடும் மயக்கம் தரும் மன்னவனின் திருவுருவம்... மன வீணையிலே நாதம் மீட்டி கீதமாக்கி நீந்துகின்ற தலைவா... இதழ் ஓடையிலே வார்த்தையெனும் பூக்களாகி மிதக்கின்ற பாட்டா...' என்று எழுதிய கைகளா அவருடையவை?

இளமையில் எல்லாருமே கலைவேகத்தில் கனிந்து மலர்ந்திருக்கின்றனர். காலம் செல்ல செல்லத்தான் ஏதோ ஒரு செக்குமாட்டுச் சூழலில் சிக்கிக்கொள்கின்றனர். நான் உதகையிலிருந்து மகிழுந்தை ஓட்டியபடி கீழிறங்கிய ஒரு நாள் 'விழிகள் மேடையாம்' பாடலை மட்டும் மீண்டும் மீண்டும் ஒலிக்கவிட்டபடி வந்தேன். ஜானகியம்மாவின் குரலும் இசையும் பாட்டு வரியும் மேகத்திலிருந்து இறங்கி வருவதைப் போன்ற ஒரு மாயத்தன்மையைத் தோற்றுவித்தன. சில ஆண்டுகளுக்கு முன் இயக்குநர் துரையின் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றைப் பார்த்தேன். தாம் ஆக்கிய படங்கள் குறித்து அவர் மிதமிஞ்சிய பெருமையெல்லாம் கொள்ளவில்லை. அப்போதைய சூழலில் எவ்வாறு அப்படங்களை ஆக்க முடிந்தது என்பதைப்பற்றிய நினைவுகளை மட்டும் பகிர்ந்தார். தமிழ்த் திரையுலக வரலாற்றில் அவர்க்கென்று ஒரு தனிப்பக்கம் உண்டு. பசி, கிளிஞ்சல்கள், துணை என்னும் மூன்று திரைப்படங்கள் அவருடைய பெயரை எப்போதும் சொல்லிக்கொண்டிருக்கும். எண்பதுகளின் வறுமை எத்தகையது, அவற்றிடையே அடித்தட்டு மக்கள் அவ்வாறு வாழ்ந்தனர், அவர்களுடைய காதலும் பாசமும் பிழைப்பும் எவ்வாறிருந்தன என்பதை உணர வேண்டுமானால் துரையின் பசி திரைப்படத்தைச் சான்றாக்கிக் காட்டலாம். 'பசி'யை எடுத்த துரைதான் 'நீயா' திரைப்படத்தையும் இயக்கினார் என்பது காலம் செய்த கோலம்தானேயன்றி வேறென்ன? எப்படி விழிகள் மேடையாம் பாடலை எழுதியவர்க்கு "இது அந்தப் புலி அது இந்தப் புலி" என்று சொல்ல நேர்ந்ததோ அதுதான் துரைக்கும் நேர்ந்திருக்க வேண்டும். கனவுகளோடு வரும் எந்தக் கலைஞனும் தன் கனவுகளை விட்டுக்கொடுக்காத இலட்சியப் பாதையில் எப்போதுமே நடக்க முடிவதில்லை.

    Related News...

பிக் பாஸ் வீட்டில் சிசிடிவி கேமராவை உடைத்து தற்கொலை மிரட்டல் விடுத்த நடிகர் வெளியேற்றம்
பித்தலாட்ட பிக்பாஸ்!- ஒரு டெக்னிகல் அலசல்
இந்த மனுஷன் டயர்டே ஆகமாட்டாரா... தூக்கமே வராதா? தனுஷை வியக்கும் பிரபலங்கள்! #HBDDhanush
தனுஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்.... இது ஒரு தனுஷ் காலம்! #HBDDhanush
நான் அப்படி செஞ்சிருக்கக் கூடாது: இப்ப ஃபீல் பண்ணும் தனுஷ்
இரண்டே இரண்டு கேள்வி கேட்ட போலீஸ்: கதறி அழுத காவ்யா மாதவன்
கமல் மீதான விமர்சனத்தை முதல்வர் தவிர்த்திருக்கலாம்.. சொல்றது யாருன்னு பாருங்க!
கடுந்தமிழ், புரியாத வாக்கியங்கள்... கலங்கடிக்கும் கமல் ட்வீட்கள்!
அஜீத்தை பார்த்து பொறாமைப்படும் விஜய்: அட, நெசமாத்தாங்க!
சொன்ன மாதிரியே திடீர்னு கையில் குழந்தையுடன் வந்து நின்ற 'அம்மா' சன்னி லியோன்