ஒருநாள் இரவில்
02 Wednesday Dec 2015

கேரளாவில், ரூ.75 லட்சத்தில் தயாரித்து ரூ.6 கோடி வசூல் செய்த ‘ஷட்டர்’ என்ற மலையாள படத்தை அப்படியே தமிழில் படமாக்கி இருக்கிறார்கள்.

சத்யராஜ்–கல்யாணி நடராஜன் தம்பதிக்கு திருமண வயதில் மகள் (தீக்ஷிதா) இருக்கிறார். அவருக்கு ஒரு ‘பாய் ப்ரெண்ட்.’ இருவரும் ஜோடியாக ‘பைக்’கில் வருவதை சத்யராஜ் பார்த்து விடுகிறார். இரண்டு பேருக்கும் இடையே காதல் இருக்குமோ என்று சந்தேகிக்கிறார். மகளின் படிப்பை நிறுத்தி, உடனடியாக திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறார்.

இதற்கு மகளும், மனைவியும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அந்த மன அழுத்தத்தில், தனது வீட்டுக்கு முன்னால் பூட்டியே கிடக்கும் கடைக்குள் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துகிறார். போதையில், ஆட்டோ டிரைவருடன் சேர்ந்து ஒரு விபசார அழகியை அந்த பூட்டிக்கிடக்கும் கடைக்குள் அழைத்து வருகிறார்.

அழகிக்கு டிபன் வாங்குவதற்காக (சத்யராஜையும், அழகியையும் உள்ளே வைத்து பூட்டி விட்டு) ஆட்டோ டிரைவர் ஓட்டலுக்கு போகிறார். அவரை மது அருந்தி விட்டு ஆட்டோ ஓட்டிய குற்றத்துக்காக போலீஸ் பிடிக்கிறது. கடைக்குள் மாட்டிக்கொண்ட சத்யராஜ் தவிக்கிறார். அழகியோ அடுத்த வாய்ப்புக்காக வெளியே போக துடிக்கிறார்.

இருவரும் எப்படி, எப்போது வெளியே வருகிறார்கள்? என்பதை எதிர்பார்ப்பும், விறுவிறுப்புமாக படமாக்கியிருக்கிறார்கள்.

சத்யராஜ் திறமையான நடிகர் என்பது தெரிந்த தகவல். சரியான வாய்ப்பு கிடைத்தால், தேசிய விருதை தட்டி வந்து விடுவார் என்பதற்கு உதாரணம், இந்த படம்.

பஸ் நிறுத்தத்தில் நிற்கும் அழகியிடம் இருந்து ‘சிக்னல்’ கிடைத்து விட்டதைப் பார்த்து சபலப்படும் காட்சியில் ஆரம்பித்து, பூட்டிய கடைக்குள் இருந்து தனது மனைவி–மகளின் நடவடிக்கைகளை ஜன்னல் வழியாக எட்டிப் பார்ப்பது, தனது சபல புத்தி அக்கம் பக்கத்தினருக்கு தெரிந்து அவமானப்படுவது போல் கனவு காண்பது, ஷட்டரை திறந்தது யார்? என்பது தெரிந்ததும் மனைவி–மகளை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் தலை குனிவது, மகளின் திருமண ஏற்பாடுகளை நிறுத்துவது வரை, காட்சிக்கு காட்சி கதையுடன் ஒன்ற வைக்கிறார், சத்யராஜ்.

விபசார அழகியாக அனுமோள், வசீகர முகம். ஆட்டோ டிரைவராக வருண் (ஐசரிவேலனின் பேரன்), சினிமா டைரக்டராக யூகிசேது, பட அதிபராக ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோர் கதாபாத்திரங்களுடன் கச்சிதமாக பொருந்துகிறார்கள். எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவும், நவீன் ஐயரின் பின்னணி இசையும் காட்சிகளுக்கு ஜீவனாக அமைந்துள்ளன.

மனசாட்சிக்கும், மானம் மரியாதைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு குடும்ப தலைவர் (என்னதான் போதையாக இருந்தாலும்), தனது வீட்டையொட்டி அமைந்துள்ள கடைக்குள் விபசார அழகியை அழைத்து வருவாரா? என்பது பெரிய கேள்விக்குறி.

என்றாலும், பூட்டிய கடைக்குள் இரண்டு கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு ஒரு திகில் படத்துக்குரிய திருப்பங்களுடன் கதை சொல்லியிருப்பதற்காக டைரக்டர்–எடிட்டர் அந்தோணியை பாராட்டலாம். ஷட்டரை திறந்து விட்டவர் யார்? என்பதும், மகளின் களங்கமில்லாத நட்பும் சத்யராஜுக்கு தெரியவரும் இடம், கவிதை.

தனது திரைக்கதை (ஸ்கிரிப்ட்) நேசத்துக்குரிய பெண்ணின் கையில் இருப்பதை பார்த்து, அவள் யார்? என்பதை டைரக்டர் யூகிசேது புரிந்துகொள்வதும், அழகிக்கும் புரிய வைப்பதும், தியேட்டரில் கைதட்டலை அள்ளுகிற ‘கிளைமாக்ஸ்.’

    Related News...